இந்துமதம் எங்கே போகிறது?
- Get link
- X
- Other Apps
இந்துமதம் எங்கே போகிறது?
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர்
நக்கீரன் பதிப்பகம்
விலை 275 ரூபாய்
352 பக்கங்கள்
புதுமைப்பித்தன் தன்னுடைய கடவுளின் பிரதிநிதி என்ற சிறுகதையில் இப்படி கூறுகிறார். "திரு சங்கர் சிற்றூரில் தமது தொண்டை பிரச்சாரம் செய்ய வந்தார். அவரும் ஜாதியில் பிராமணர். தியாகம், சிறை என்ற அக்கினியால் புனிதமாக்கப்பட்ட வர். சலியாது உழைப்பவர். உண்மையை ஒளிவு மறைவு இல்லாது போட்டு அடித்து உடைப்பவர்." இந்த வரிகள் சங்கருக்கு பொருந்துகிறதோ இல்லையோ ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்களுக்கு அப்படியே பொருந்துகிறது. இவர் சிறை செல்லாமல் சிந்தனையால் புனிதமாக இருக்கிறார்.
இந்தியாவில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்? என்ற கேள்வியில் முதல் கட்டுரையை தொடங்கி. ஜாதிகள் தொடக்கம், அதன் விரிவாக்கம். வேதம், மநு, உபநிஷத்துக்கள், உபநயனம் என பலவற்றை எடுத்துக்கூறி அதற்கு தக்க உதாரணமும் கொடுத்துள்ளார். மேலும் வேதம் மற்றும் மநுவுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள். சங்கரர் ராமானுஜர் வியாசர் ஜெய்மினி எனப் பலரின் கதைகள். பல மடங்களின் கதைகள், பல புனித தளங்களின் கதைகள். பல சடங்குகளின் காரணங்கள். இவை எல்லாவற்றையும் தகுந்த சிந்தனையின் கேள்விக்கு உட்படுத்தி நம்மை சிந்திக்க வைக்கிறார்.
பாலிய கல்யாணம் ஆகாத குழந்தைகளின் தந்தைகளுக்கு மனு கொடுக்கும் தண்டனை. பெண்களுக்கு வேதமும் மனுவும் இதுவரை செய்து வைத்திருந்த கொடுமைகள். சீதையும் ராமனும் செய்துகொண்டது பால்ய விவாகம் வால்மீகி ராமாயண படி என்று தர்க்கம். கடவுள்களின் ஆயுதங்கள் குறிப்பாக சுதர்சன சக்கரம் பற்றிய விளக்கம். மதுரை திருப்பதி, ஸ்ரீரங்கம், சிதம்பரம், ஐயப்பன் போன்ற கோவில்களின் கதைகள். விரதம், கல்யாணம், ஆன்மா, மோட்சம், தட்சனை, பாவ மன்னிப்பு, பரிகாரம், யாகங்கள் என எல்லா இடங்களையும் தொட்டு சாட்டையடி கொடுக்கிறார்.
சைவமும் வைணவமும் தமிழை எவ்வளவு அழகாக பாடி வைத்திருந்தாலும். சமஸ்கிருதத்தை மட்டும் இவர்கள் திணிப்பதற்கு ஆசிரியர் கூறும் சான்றுகள் மிகவும் கூர்ந்து கவனிக்கத்தக்கது. தொண்டரடிப் பொடியாழ்வார் அவர்களின் திருப்பள்ளி எழுச்சி எல்லா விதத்திலும் சமஸ்கிருத சுப்ரபாதம் கேட்பதற்கு மேலானதே.
இந்து என்பதன் இல்லாத வரலாறு, நவீன இந்தியாவின் இந்துத்துவத்தை நிலைநிறுத்த எடுத்த முயற்சிகள் என எல்லாவற்றையும் சாடுகிறார். இறுதியாக விவேகானந்தரின் உரையோடு புத்தகத்தை முடிக்கிறார். என் நண்பர் ஒருவர் இந்த புத்தகத்தை பற்றி ஒரு விளக்கம் கூறியிருந்தார். இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை கிழித்துவிட்டு யாரிடமாவது படிக்கச் சொன்னாள் இது பெரியார் எழுதியது என்று கூறிவிடுவார்கள் என்று. அதை நானும் மறுப்பதற்கில்லை. ஆன்மீகத்தை விரும்புவர்கள் நிச்சயம் ஒருமுறையேனும் இந்த புத்தகத்தை வாசியுங்கள். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment