கூரைப்பூசணி
கூரைப்பூசணி
பாலகுமாரன்
வாசக நண்பர் ஒருவரிடம் வேள்பாரி குறித்து உரையாடிக்கொண்டிருந்தபோது, பேச்சு வரலாறு ஆன்மீகம் குறித்து செல்கையில் நண்பர் உடனடியாக பிடித்தது பாலகுமாரனை. பாலகுமாரனின் அனைத்து ஆக்கங்களையும் படித்து இருப்பதாக கூறினார். ஒன்றை வாசித்து விடுவோமே என்று நண்பரிடம் வாங்கிய புத்தகம் இந்த கூரை பூசணி. இந்த புத்தகம் ஐந்து பெரும் கதைகளை தொகுப்பாகக் கொண்டுள்ளது.
கூரை பூசணி : ஒன்பது பிள்ளைகளைப் பறிகொடுத்து விட்டு பத்தாவதாக ஒரு பிள்ளையை மடாதிபதி துறவியாக பிடுங்கிக் கொள்ளும் போது. மகனுக்கும் தாய்க்கும் ஆனா ஒரு பாச போராட்டம்.
யானைபாலம்: இது ராஜேந்திர சோழன் காலத்தில் நடந்த ஒரு கதை. ராஜேந்திர சோழன் வடநாட்டுக்கு படையெடுத்துச் செல்லும் பொழுது மஹா நதியை கடக்க என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்த வேளையில். அவனுக்கு படையின் மூத்த தளபதி கொடுத்த ஒரு அறிவுரையின்படி அவனது 300 யானைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு பாலம் அமைத்த வரலாற்று கதையை பதிவிடுகிறார்.
செம்மை: இது ஒரு மகாபாரத துணை கதை. கிருஷ்ணன் தன்னை கட்டிப்போட மகாதேவனுக்கு கற்றுக்கொடுக்கும் ஒரு கதை. இந்தக் கதையில் மேலும் சுவாரசியமாக திரௌபதிக்கு கர்ணன் மேல் எவ்வளவு கோபம் இருந்தது அதில் ஒரு துளி அவன்மீது கண்ணிய பார்வையும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று திரௌபதியின் உரையாடலில் அமைத்திருக்கிறார்.
தரை: இது ஒரு ராமாயண துணை கதை. இலங்கையை நோக்கிப் படையெடுக்கும் ராமனின் படையில், சிறந்த அனுமன் பக்த போர்வீரன் தன் இளம் மனைவியை பிரிந்த தவிப்பு. அதற்காக அவன் செய்யும் விவாதங்கள் அதற்கு ராமனின் விளக்கங்கள் என்று கதை செல்கிறது.
மலை: இது பிள்ளைக் கறி கேட்ட ஒரு சிவபக்தர் இன் கதை. ஆனால் இந்த கதையை சொன்ன விதம் மிகவும் அழகாக இருந்தது மாமல்லபுரத்தில் உருவான சிற்பங்கள், அன்றைய காலத்தில் இருந்த சீன தமிழக உறவுமுறை, பல்லவர்கள் ஆட்சிமுறை எனப் பலவற்றை தொட்டுவிட்டு கடைசியாக சிவ கதையாக முடிகிறது.
மேலே கூறிய கதைகள் அனைத்தும் ஒரு இதிகாச அல்லது கற்பனைக் கதையின் வெளிப்பாடு. இந்த கதைகளில் சிலவற்றில் பாலகுமாரன் குறிப்பிடுவது என்னவென்றால் தமிழகத்தின் பெரிய கோவில்களில் உள்ள சில சிலைகள் வட நாடுகளில் இருந்து திருடப்பட்டு கொண்டு வந்துள்ளது. இது எவ்வளவு தூரம் உண்மை என்பது வரலாற்றாசிரியர்கள் அல்லது தொல்லியல் துறையினர் கூறவேண்டியது. ஒரு வேகமான வாசிப்பனுபவத்தையும் இதிகாசங்களை தொட்டுப் பார்க்கும் ஒரு நோக்கும் இருந்தால் நிச்சயம் இந்த பக்கத்தை புத்தகத்தை படிக்கலாம்.
Comments
Post a Comment