பிறகு
- Get link
- X
- Other Apps
பிறகு
பூமணி
காலச்சுவடு பதிப்பகம்
விலை 275 ரூபாய்
255 பக்கங்கள்
கொரோனா காலம் என்று தனக்காக ஒரு வரலாற்றையே கட்டமைத்துக் கொண்டிருக்கிறது கண்ணுக்கு தெரியாத கிருமி. இன்னும் சில நாட்களில் மருத்துவரீதியாக கொரோனா பெற்ற ஜாதி. கொரோனா இல்லாத ஜாதி என்று மனித இனங்கள் பிரிக்கப்பட்டு விடுமோ என்று சந்தேகமாக உள்ளது. ஏதோ ஒரு தட்டு மக்களுக்கு மட்டும் இந்த நோய் என்பது போய் என்று எல்லாத் தட்டு மக்களுக்கும் பரவியிருக்கிறது. இந்த நோயின் தாக்கம் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை எந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை எண்ணிப்பார்க்க மனம் சற்றே கனக்கிறது. இந்த சூழலிலும் அதிகாரம், அறம் தவறி நிகழ்த்தும் தவறுகள் வருத்தத்திற்குரியது. மனம் அறம் பற்றி மனிதம் காக்க வேண்டிய தருணங்கள் இவை நண்பர்களே!
மணலூத்து சக்கிலிய குடிக்கு மணலூத்தின் ஊர் பெரியவர்களால் துரைசாமிபுறத்திலிருந்து இடம் பெறுகிறான் கதையின் மையப் பாத்திரம் அழகிரி. அழகிரியின் தொழில் செருப்பு மற்றும் தோல் பொருட்கள் தைத்தல் குறிப்பாக விவசாயிகளுக்கு பயன்படும் நீர் இறைக்கும் கமலம் தைத்தல். இடம்பெயர்ந்த அழகிரியின் தோராயமாக இருபது ஆண்டுகால வாழ்க்கையை அவன் சந்திக்கும் சக அடித்தட்டு மனிதர்களோடு அசைபோட்டு செல்கிறது நாவல்.
அழகிரியின் முதல் மனைவி காளி, மகள் முத்து மாரி. முத்துமாரிக்கு இரண்டு வயதிருக்கும் பொழுது காளி நோய்வாய்ப்பட்டு இறக்கிறாள். அழகிரி மாட்டுச்சந்தையில் ஆவடையை சந்திக்கிறான். ஒருவார சந்திப்பில் ஆவடை இரண்டாவது மனைவியாகிறாள். ஆவாடை குழந்தை முத்துமாரியை காளியை விட நன்றாகவே கவனிக்கிறாள். முத்துமாரிக்கு திருமணம் நடக்கிறது, மூத்த மகன் பிறக்கிறான். முத்துமாரியின் கணவன் ராணுவத்தில் பணி புரிய செல்கிறான். ஓராண்டு இடைவேளைக்குப்பின் வரும் கணவனிடம் அதிகப்படியான மாற்றங்கள். மாற்றங்கள் முத்துமாரியின் தாலியை பறிக்கிறது. முத்துமாரிக்கு மீண்டும் ஒரு திருமணம், இரண்டாவது மகள். இரண்டாவது கணவர் நல்லவர்தான், சூழ்நிலையால் ஏற்படும் பிரிவில் முத்து மாரி தன் இரண்டாவது பிள்ளையுடன் தன்னை மாய்த்துக் கொள்கிறாள். முத்துமாரியின் மூத்த மகனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற அழகிரியின் வைராக்கியத்தை சுமந்துகொண்டு கதை நிறைவு பெறுகிறது.
அழகிரிக்கும், நன்கு வாழ்ந்து கெட்ட ஊர் காவலர் கந்தையாவுக்கும் இடையான நட்பு. கந்தையாவின் கதை. கருப்பனின் குறும்பு, மாடுகளின் மேல் அமர்ந்துகொண்டு அவன் பாடும் பாடல்கள். ஊர் பெரியவர்களின் தவறுகளை தெரிந்து கொண்டதால் ஏற்படும் தாக்கங்கள். மாடு அறுப்பு. கதை நடக்கும் கால கட்டம் சுதந்திர போராட்டத்திற்கு பிந்தைய காலகட்டம் என்பதால், ஒரு ஊர் சந்திக்கும் முதல் தேர்தல், சக்கிலி குடி தவிர்த்து ஊருக்குள் வந்த முதல் கரண்ட், கோவில்பட்டிக்கு முதலாக வந்த திரையரங்கு என ஊரின் நிகழ்வுகள். அனைவரையும் அழகாக படம்பிடித்திருக்கிறார் பூமணி.
மக்கள் மொழி வழக்கு சொற்களை நாவலின் இறுதியில் விளக்கங்களுடன் கொடுத்திருக்கிறார்கள். தேவி பாரதியின் முன்னுரை பூமணியின் எழுத்துக்களை தமிழ் இலக்கியத்தோடு எடை போட்டு விளக்குகிறது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment