காடோடி
- Get link
- X
- Other Apps
காடோடி
நக்கீரன்
காடோடி பதிப்பகம்
விலை: 300 ரூபாய்
பக்கங்கள்: 312
மொழிபெயர்ப்பு சாராத தமிழ் நாவல்கள் பொதுவாக தமிழகம் சார்ந்து அல்லது இந்தியா சார்ந்து களமாகக் கொண்டு அதிகம் எழுதப்படுகிறது. இதில் விதிவிலக்காக அவ்வப்போது வேறு நாட்டை கதைக்களமாகக் கொண்டு கதைகளும் எழுதப்படுகிறது. அந்தவகையில் இந்திரா பார்த்தசாரதி எழுதிய ஏசுவின் தோழர்கள் போல காடோடியின் கதைக்களமும் அந்நிய மண். துவான் போர்னிய நாட்டின் காட்டுக்குள் மரம் அறுக்கும் நிறுவனத்தின் மேற்பார்வையாளர். உமர், பிலியவ், அன்னா, ஜோஸ், ரலா, குணா, குவான், பார்க், ஆங் போன்ற பாத்திரங்களை வைத்து கதை கையாளப்படுகிறது.
ஆசிரியர் நம்மை கை பிடித்து காட்டுக்குள் அழைத்துச் சென்று அதன் அழகை, இசையை, தூய்மையை, பிரமிப்பை, தொடர்பை வாசிப்பின் மூலம் நமது ஐம்பொறிகளால் உணர வைக்கிறார். தும்பிக்கை குரங்குகளில் தொடங்கி பல விலங்குகள், இரு வாசிகள் பறவைகள், மீன்கள், மனிதர்களின் மூதாதையரான குரங்குகளுக்கு மூதாதையர்கள் எனப்படும் லீமர், துபையா போன்ற அணில் வகைகள், பூச்சியினங்கள், மர வகைகள், நீர்வழிப் பாதைகள் என அனைத்து குறிப்புகளும் சுவாரசியம். நட்பை நட்பாகவும் காதலை காதலாகவும் பகிர்ந்துள்ளார்.
பல வேட்டை களங்களை நம் முன் நிறுத்துகிறார்கள்.
நகரவாசி மனிதர்களின் வேட்டை என்பது, அது வேட்டையாடப்படும் பருவம், சூழல், குறிப்பிட்ட விலங்கின் ஆண் பெண் விகிதாச்சாரம் என எதையும் பாராது சுட்டுக் கொண்டே இருக்கும். காட்டு மனிதர்களின் வேட்டை அப்படியல்ல என்பது பிலியவ் கூற்று. பிலியவ் இந்த நாவலின் ஆணிவேர்.
நாகரீக மனிதன், காட்டின் தொல்குடி அவர்களின் காட்டை சார்ந்து இயங்கும் உணவு பழக்கவழக்கங்கள் குறித்த வேறுபாடுகள் குறித்து பல இடங்களில் விவரிக்கிறார். லயாங்... லயாங்... குருவிகளின் கூடு கிலோ 8 ஆயிரம் டாலர். பெருமைக்காக பார்க் வேட்டையாடி உண்ணும் பாம்பு, உயிருள்ள குரங்கின் மூளை உணவு என மேட்டுக்குடிகள் காட்டை அணுகும் பார்வையும். காட்டில் கிடைக்கும் பழங்கள் காய்கள் கொட்டைகள் தேவைக்கேற்ப விலங்கு வேட்டை என தொல்குடிகளின் உணவு முறைகளையும் அலசுகிறார்.
ஈபுவின் தாய் கேட்கும் கேள்விகள் ஒட்டுமொத்த உலகத்திற்கு ஆனாது. அழிக்கப்படும் காடுகள் என்பது மீண்டும் காடுகள் ஆகாமல் பனை தோட்டங்கள், கட்டிடங்கள் என மாறுவது எப்படி? இதற்கு மெத்தப்படித்த அரசு மற்றும் அதிகார வர்க்கமும் துணை போவது ஏன்? நமது மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் ரப்பர் தோட்டங்கள், காபி தோட்டங்கள் என நாம் மாற்றிக்கொண்டு இருக்கிறோம்.
ஒரு மரம் வெட்டப்படுகிறது என்றால் மடிவது ஒரு உயிர் அல்ல அதைச் சுற்றி இயங்கும் கோடான கோடி உயிர் சுழற்சி. வெட்டபடும் ஒரு மரத்திற்க்காக உங்கள் மனம் வருந்தும் எனில் உங்களில் ஒரு தொல்குடி மனது உள்ளது. வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்காகவும் அது நாசி புல்லாங்குழல் வாசித்துக் கொண்டே இருக்கும்.
மரம் காப்போம் காடு வளர்ப்போம்.24810:06 AM
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment