விஞ்ஞான லோகாயத வாதம்
விஞ்ஞான லோகாயத வாதம்
ராகுல் சாங்கிருத்தியாயன்தமிழில்: ஏ ஜி எத்திராஜீலு
பக்கங்கள்: 153
விலை: 135
சென்ற வருடம் சென்னை புத்தக கண்காட்சி சாலையில் அதிகம் விற்ற 10 புத்தகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ராகுல் சாங்கிருத்தியாயன் அவர்களின் வால்கா முதல் கங்கை வரை புத்தகமும் இடம்பெற்றிருந்தது. வடமாநிலத்தை சேர்ந்த இவரின் தமிழகத்தில் அதிகம் வாசிக்கப்படுவது வரவேற்கத்தக்கதே. இந்தப் புத்தகம் எழுதிக் கிட்டத்தட்ட எண்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது.
உண்மையில் இந்தப் புத்தகத்தின் பல பக்கங்களை இரண்டு மூன்று முறை படித்து அர்த்தம் புரிந்து கொண்டேன். ஒரு புரியாத ஆங்கில படத்தை பார்ப்பது போன்று ஒரு அனுபவத்தை தந்தது இந்த புத்தகம். அதற்கு நமக்கு இதுவரை கற்பிக்கப்பட்ட மிக எளிமையான தத்துவங்கள் மட்டுமே காரணமாக இருக்கலாம். அது திருக்குறள் ஆக இருக்கலாம், எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்ற கீதை சாரமாக இருக்கலாம் அல்லது காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா என்ற கண்ணதாசனின் வரிகளாக இருக்கலாம். நம் சமூகத்தில் தத்துவ தர்க்கங்கள் அதிகம் இல்லாத சூழலை நாம் ஏன் உருவாக்கி வைத்திருக்கிறோம் என்று புலப்படவில்லை.
உலகில் இதுவரை இரண்டு வகையான அடிப்படை தத்துவக் கோட்பாடுகள் உண்டு (கம்யூனிஸ்டுகளின் பார்வையில், ராகுல் ஒரு பௌத்த மதத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்.). ஒன்று கருத்துமுதல்வாதம், இரண்டு பொருள்முதல்வாதம். கருத்து முதல் வாதத்தை இப்படி விளக்கலாம். யாரோ ஒருவரின் எண்ணத்தை அல்லது கற்பனையை சமுதாய பிம்பமாக மாற்றி உண்மை என்று எண்ண வைப்பது. பொருள்முதல்வாதம் என்றால் இருக்கின்ற உண்மையை அதன் தன்மையை பல கோணங்களில் ஆராய்ந்து உண்மை என்று உணர்த்த முயல்வது. முதலாவதை ஆன்மிகம் என கொண்டால், இரண்டாவதை விஞ்ஞானம் என்று கூறலாம். இந்த புத்தகத்தின் மூலத்தை அழகாக ஒரு வரியில் இப்படி சொல்கிறார். உண்மை என்பது உருவாக்கவோ அல்லது உண்டாக்கவும் முடியாது. அது ஆராய்ந்து அடையப்பட வேண்டியது.
புத்தகத்தின் முதல் இரண்டு பாகங்களில் கருத்துமுதல்வாத கருத்துக்களை விமர்சிக்கிறார். இந்த விமர்சனத்துக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய இந்தியத் தத்துவங்கள் என்ற புத்தகம் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. மேலும் இவர் சர் சி வி ராமன் நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளை ஒருகாலை இருபதாம் நூற்றாண்டிலும் மற்றொரு காலை புராண காலத்திலும் வைத்திருப்பவர்கள் என்று விமர்சிக்கிறார். வெறும் எதிர் விமர்சனத்தோடு நின்றுவிடாமல் புத்தகத்தின் மூன்றாவது பாகத்தில் விஞ்ஞான தத்துவங்களை அந்த தத்துவங்களில் இதுவரை நிகழ்ந்த தர்க்கங்களை விரிவாக விளக்குகிறார். இதற்கு பல தத்துவ ஆசிரியர்களின் குறிப்புகளை தருகிறார். இதில் அவர் கையாண்ட வரிசை மிகவும் கவர்கிறது. இயக்க இயல், இயற்கையின் இயக்கம், முரண்பாடுகளின் இணைப்பு, முரண்பாடுகளின் மோதல், அதனால் ஏற்படும் குணாம்ச மாறுதல் என அவர் கூறும் விளக்கங்கள் விஞ்ஞானத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை அடைய செய்கிறார்.
விஞ்ஞானத்தால் கிடைத்த அறிவை சந்தேகித்த கருத்துமுதல்வாதம் இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞானத்தால் விளைந்த அனைத்தையும் உள்வாங்கி, தனதாக்கிக் கொண்டு கருத்துமுதல்வாதம் பிரச்சாரம் அல்லது சுயதம்பட்டம் செய்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் நிச்சயம் இது ஒரு வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்.
Comments
Post a Comment