வெண்ணிறக் கோட்டை

 



வெண்ணிறக் கோட்டை
ஆசிரியர்: நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஓரான் பாமுக்
மொழிபெயர்ப்பாளர்: ஜி குப்புசாமி
பக்கங்கள்: 176
விலை: Rs 200

விஞ்ஞானம் எழுத்து ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற ஒரு மேற்கத்திய சிந்தனையாளன் ஒரு கப்பல் பயணத்தில் துருக்கிய கப்பல் படையால் சிறை பிடிக்கப் படுகிறான். முதலில் அவன் சாதிக்பாட்சா என்ற சிறு நில மன்னனின் சிறையில் அடைக்கப்படுகிறான். இவனுக்கு மருத்துவம் தெரியும் என்பதால் சிறையில் சற்று பிரபலம் அடைகிறான். அதனால் பாட்ஷா விற்கு மருத்துவம் பார்க்கும் வாய்ப்பும் கிட்டுகிறது. இதனால் சிறையிலிருந்து வெளியில் வாழ, அவன் அவனைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஹோஜா என்பவனுக்கு அடிமையாக பரிசளிக்க படுகிறான். ஹோஜா விரும்பினால் இவனை விடுவிக்கலாம் அல்லது அடிமையாகவே வைத்திருக்கலாம். ஹோஜா ஒரு அறிவியல் கற்றுக்கொள்ளும் ஆர்வமுடையவன் என்றாலும் தனித்துவமானவன். பாட்ஷா இவனை பலமுறை இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற கூறியும் மறுத்துவிடுகிறான்.

ஹோஜாவும், இவனும் இணைந்து ஒரு மாபெரும் வானவேடிக்கை நிகழ்ச்சி நிகழ்த்துகிறார்கள். அதில் பாஷா துருக்கியின் சுல்தானை சிறப்பு விருந்தினராக அழைத்து இருக்கிறார். இதில் ஹோஜா தனது பிம்பத்தை இவனைப் பின் நிறுத்தி வளர்த்துக் கொள்கிறான். இவன் வாழ்க்கை ஹோஜாவுடன் எழுதுவது ஆராய்ச்சி செய்வது சித்திரவதை படுவது என்று நகர்கிறது.

ஒரு முறை துருக்கியை பிளேக் நோய் தொற்றுகிறது. மரண ஓலம் நாட்டின் எல்லா பக்கங்களிலும் ஒலிக்கிறது. சிறுவயது சுல்தான் என்ன செய்வதென்று தெரியாது ஹோஜாவிடம் ஆலோசனை கேட்கிறான். இதிலிருந்து ஹோஜா நாட்டின் ஆஸ்தான ஜோதிடன் ஆகிறான். இதற்கிடையில் பாஷா தவறி விடுவதால் இவனை மறைத்து ஹோஜா தன்னால் எட்ட முடிந்த உயரங்களை எட்டுகிறான். இவன் ஒருமுறை ஹோஜாவிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறான், அது பலிக்கவில்லை. சுல்தான் ஹோஜாவுக்கு எதிரிகளை வீழ்த்த ஒரு மாபெரும் ஆயுதத்தை தயாரிக்க கட்டளையிடுகிறான். இந்த ஆயுதத்தை தயாரிக்க ஹோஜா தானே நேரடியாக இறங்குகிறான், இதனால் இந்த நேரத்தில் இவன் சுல்தானிடம் புகழ் பெறுகிறான். இவன் கடைசியில் என்ன ஆகிறான் தனது நாட்டிற்கு சொல்கிறானா? ஹோஜா தயாரித்த மாபெரும் ஆயுதம் என்ன ஆனது? சுல்தான் கடைசியாக போரிடச் சென்ற வெள்ளைக் கோட்டையை தகர்த்தாரா? என்று முடிகிறது கதை.

ஹோஜாவின் "நான் ஏன் நானாக இருக்கிறேன்" என்ற தர்க்கத்திற்கு இருவரும் சேர்ந்து எழுத ஆரம்பிக்கிறார்கள். இந்த புள்ளியிலிருந்து ஆசிரியர் இருவரையும் ஒன்றாக இணைத்து ஆடும் ஒரு மாயப் பின்னல் மிகவும் அருமை. இந்தப் பின்னலில் ஹோஜாவின் உருவத்தில் வாசகர்களையும் இணைத்து வந்து நிறுத்துவது தனித்திறமை. "மட்டுமீறிய கற்பனைகள் எவ்வளவு எளிதாக நம்மை கவிழ்த்து விடுகின்றன". "கணிப்புகள் கோமாளித்தனமானவை ஆனால் முட்டாள்களை கவர்வதற்கு அவை பெரிதும் பயன்படும்". போன்று வரிகள் ஆகட்டும் அல்லது நான் என்ற பிரதியை வைத்து நிகழ்த்திக் காட்டும் பல தத்துவ தர்க்கங்கள் சிந்திக்க வைக்கிறது.

இப்படி ஒரு சிக்கலான நாவலை தமிழில் அதன் வடிவம் குறையாமல் மொழிபெயர்ப்பதற்கு ஜி குப்புசாமி அவர்களுக்கு சிறப்பு வணக்கங்கள்.

உலகமே அடங்கியிருக்கும் இந்த தருணங்களில் குடும்பத்துடன் வாசியுங்கள். விலகி இருப்போம் விழாமல் இருப்பதற்கு.

Comments

Popular posts from this blog

கூரைப்பூசணி

கரிசல் கருதுகள்