பட்டத்து யானை & அரியநாச்சி
- Get link
- X
- Other Apps
பட்டத்து யானை
ஆசிரியர்: வேல ராமமூர்த்தி
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கங்கள்: 376
விலை 300
புத்தக வாசிப்பில் வேகமான வாசிப்பு அனுபவம் தரும் புத்தகங்கள் பல உள்ளன, எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். அதற்கு நேர் எதிரிடையாக சிக்கலான அல்லது ஆழ்ந்த வாசிப்பனுபவம் கோரும் படைப்புகளும் அதிகம் உள்ளது எழுத்தாளர்களும் அதிகம் உள்ளனர். இவற்றில் எதை, யாரை, எப்படி வாசிப்பது என்பதையெல்லாம் வாசகர்கள் தங்களின் விருப்பத்திற்கு தேர்வு செய்து கொள்ளுங்கள். இந்தத் தேர்வுக்கு ஆகச்சிறந்த உதவி தங்களின் சிந்தனை மற்றும் ரசனையாக மட்டுமே இருக்கட்டும். முதல் ரக புத்தகங்களுக்கு வாசகர்கள் தங்களின் சிந்தனை திறன் மற்றும் நேரம் ஆகியவற்றை மிகவும் குறைவாக செலவழிக்க நேரிடும். அப்படிப்பட்ட பல படைப்புகளில் இழையோடும் வேகம், அவற்றின் மேலிடும் வியப்பு அவர்களை புத்தகத்தை கீழே வைக்க விடாது. அப்படி இரண்டு புத்தகங்களை அடுத்தடுத்து படிக்க முடிந்தது.
தனுஷ்கோடி வாணிப நகரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வன்முறை நடக்க இருப்பதாக தகவல்கள் வருகிறது. வெள்ளை அதிகாரி லாரன்ஸ் தலைமையில் தனுஷ்கோடி ரயில் நிலையத்தை சோதனை இடுகிறார்கள். சோதனையில் அகப்படாமல் தப்பித்த
பெருநாழி ரணசிங்கம் தனுஷ்கோடியில் கப்பலை வெடிவைத்து தகர்க்கிறார். இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகள் இறுதியில் வென்றது பட்டத்து யானையா? அல்லது அதிகாரத்தின் படையா? என்பது மீதமுள்ள கதை.
கதை ஒரே நேரத்தில் பல இடங்களில் நடப்பதால், ஒவ்வொரு பகுதியிலும் அனைத்து இடங்களையும் பின்னி செல்கிறது கதையோட்டம். "வெட்கங்கெட்ட நாணல் துப்பாக்கி முனைகளை தீண்டிச் செல்கிறது" போன்ற மேற்கோள்கள், மனித தேவைக்கு தான் சடங்குகள் அதில் மாற்றங்கள் நிகழ்வது மாபெரும் குற்றம் அல்ல என்று உணர்த்தும் மனிதர்கள், குறிப்பாக பெண்களின் மனதிடம் வீரம் பற்றிய பதிவுகள் அழகு.
கதையின் கிட்டத்தட்ட இறுதி பகுதி வரை ரண சிங்கத்தின் வீர வரலாறு குறித்து கேட்டுக்கொண்டிருக்கும் வெள்ளையனின் பகுதி சினிமாத்தனம். வெடிகுண்டு துப்பாக்கி தோட்டாக்கள் சத்தங்களை சற்று குறைத்து ஆப்பநாட்டு கலாச்சாரங்களை மண்வாசனையை இன்னும் சற்று கலந்திருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.
அரியநாச்சி
ஆசிரியர்: வேல ராமமூர்த்தி
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கங்கள்: 120
விலை 150
பகை என்ற சிறு புகை மெலிதாக தென்படும் ஒரு பொருள் எந்த தருணத்திலும் புகை அடங்கியும் போகலாம், தீப்பற்றியும் கொள்ளலாம். தீப்பற்றி விட்டால் குஞ்சென்றும் மூப்பென்றும் அறியாதே. தத்தரிகிட தத்தரிகிட தருணங்கள் தான்.
நிறை மாத கர்ப்பிணி அரியநாச்சி தன் தங்கை மாயழகியை தன் கணவரின் தம்பிக்கு திருமணம் செய்து முடிக்க சிறையில் இருக்கும் தனது தந்தையிடம் சம்மதம் கேட்டு வருகிறாள். அரிய நாச்சியின் தம்பி பாண்டியின் பாதுகாப்பில் வாழ்கிறாள் மாயஅழகி. பாண்டியின் மனைவிக்கும் மாயஅழகியை தன் தம்பிக்கு மண் முடித்து வைக்க ஒரு ஆசை. இந்த ஆசை ஒரு பழைய பகையின் வெளிப்பாடாக வருவதுதான் குரூரம். இந்த இரண்டு ஆசைகளில் எது நடக்கும் என்பதை எடுத்துச் சென்று இரத்த ஆற்றில் முடிகிறது கதை.
வருடா வருடம் சுடுகாடு சென்று தாலி கட்டாத கணவனுக்காக கதறும் வள்ளி அத்தை, மாயழகி வர்ணிப்பு, வட்டாரப் பேச்சு வழக்கு என்று இந்தக் குறுநாவல் ஒரு நல்ல வாசிப்பை தரும்.22612:25 PM
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment